42 பேருக்கு கொரோனா; சாம்ராஜ்நகர் திபெத் காலனிக்கு ‘சீல்’ வைப்பு
கடந்த 9 நாட்களில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள திபெத் காலனிக்கு சுகாதார துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொள்ளேகால்: கடந்த 9 நாட்களில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள திபெத் காலனிக்கு சுகாதார துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
42 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வந்தது. தற்போது மாநிலத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு குறைந்து வருகிறது. அதேபோல் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலும் வைரஸ் பரவல் குறைந்துள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள திபெத் காலனியில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அதாவது ஹனூர் தாலுகா பி.ஜி.பாளயா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒடயரபாளையாவில் திபெத் காலனி உள்ளது.
இங்கு ஏராளமான திபெத் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அகதிகளாக வந்து அங்கு குடியேறியவர்கள் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபெத் மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 9 நாட்களில் மட்டும் அப்பகுதியில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வீடு, வீடாக பரிசோதனை
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபற்றி அறிந்த மாவட்ட சுகாதார துறையினர் திபெத் காலனிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அந்த காலனி முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்த சுகாதார ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் அப்பகுதியில் வீடு, வீடாக சென்று அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முன்கள பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் திபெத் காலனிக்கு சீல் வைத்தனர். இதனால் அங்குள்ள மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியே வரவும், வெளிநபர்கள் அந்த பகுதிக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பு விதிகள்
இதுபற்றி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கொரோனா 2-வது அலை தொடங்கியதில் இருந்து இதுவரையில் திபெத் காலனியில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால் தற்போது திடீரென அங்கு வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அங்குள்ள மக்களிடம் முக கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் கூறியுள்ளோம். மேலும் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறோம்’’ என்றார்.
Related Tags :
Next Story