தனியாருக்கு விற்பனை செய்ய எதிர்ப்பு: எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் சேலம் கோட்ட தலைவர் நரசிம்மன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தர்மலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாநகர செயலாளர் பிரவீன்குமார் உள்பட காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், பி.எஸ்.என்.எல்., எல்.ஐ.சி. உள்ளிட்ட நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தர்மலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், நாடுமுழுவதும் பொதுத்துறை இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு 7,552 கிளைகள் உள்ளன. வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி சாதாரண ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்களின் பொது இன்சூரன்ஸ் தேவைகளை பொதுத்துறை கம்பெனிகள் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு இடையே பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்க வழிவகுக்கும் இன்சூரன்ஸ் வணிக தேசமய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவாதங்கள் எதுவும் நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த செயல்பாடு ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். எனவே, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story