பெரியபாளையம் கோவில் வாசலில் இருந்த 50 ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, பெரியபாளையம் கோவில் வாசலில் இருந்த 50 ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் மேம்பாலம் அருகே பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நுழைவாயலின் தெற்கு திசையில் பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நிலையில் இங்குள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான நிலத்தில் கடைகள் கட்டி சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அதனை அகற்றுமாறும் சென்னை ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.
இப்பணியை ஒரு வார காலத்திற்குள் செய்து முடித்து அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறும் அந்த தீர்ப்பில் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் திருவள்ளூர் மாவட்ட உதவி ஆணையர் சுப்ரமணியன் முன்னிலையில், திருவள்ளூர் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி தலைமையில், துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் சாரதி, சந்திரதாசன், அசோகன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன், பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்றனர்.
கோவிலின் தெற்கு திசையில் உள்ள நுழைவாயிலின் கிழக்கு பகுதியில் இருந்த சுமார் 50 கடைகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். அப்போது வியாபாரிகள் பல ஆண்டு காலமாக இப்பகுதியில் வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளும், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கோர்ட்டு உத்தரவை பின்பற்றி தற்போது ஆக்கிரமிப்பை அகற்றி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினர்.
மேலும் கோவிலை சுற்றி உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், நெடுஞ்சாலை துறையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், அகற்றி பக்தர்கள் விரைவாகவும், எளிதாகவும் சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story