மாமல்லபுரத்தில் இரவு 9 மணிக்கு மேல் கடைகளை திறக்க கூடாது அதிகாரிகள் வலியுறுத்தல்
கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் இரவு 9 மணிக்கு மேல் கடைகளை திறக்க கூடாது என பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வியாபாரிகளிடம் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் மூலம் கொரோனா தொற்று 3-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் மாமல்லபுரத்தில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வழிகாட்டி வதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள், மின்சாதன பொருட்கள் கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள் போன்றவற்றின் உரிமையாளர்களை அழைத்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் போலீஸ் துறை, வருவாய் துறை, பேரூராட்சி துறை சார்பில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கனேஷ் தலைமை தாங்கினார்.
மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், மாமல்லபுரம் துப்புரவு ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்துகொண்ட பிறகே அவர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும்.
கடைகளுக்கு முக கவசம் அணிந்து வராதவர்களுக்கு முக கவசம் அணிந்து வருமாறு வியாபாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகள் தோறும் தரையில் வட்டம் போட்டு 1 மீட்டர் இடைவெளியில் ஒருவருக்கொருவர் நிற்க வைத்து பொருட்கள் வழங்க வேண்டும். மாமல்லபுரத்தில் திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை பகுதியில் இயங்கும் மளிகை, காய்கறி கடைகள், மின்சாதன பொருள் கடைகள் இரவு 9 மணிக்கு மேல் இயங்க கூடாது.
சுற்றுலா பயணிகள் வியாபாரம் செய்யும் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலையில் சங்குமணி கடைகள், கற்சிற்ப கடைகள் மாலை 6 மணிக்குள் மூடிவிட வேண்டும் என கூட்டத்தில் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் வியாபாரிகள் தரப்பில் கொரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், வியாபாரிகளுக்கு என்று தனியாக முகாம் நடத்தி அனைவரும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ஆவன செய்வதாக பேரூராட்சி செயல் அலுலர் வி.கணேஷ் அவர்களிடம் உறுதி அளித்தார். கூட்டத்தில் மாமல்லபுரம் வட்டார வியாபாரிகள் சங்கத்தலைவர் ராஜசேகர், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடியில் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க பேரூராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story