கொரோனா விழிப்புணர்வு போட்டி ‘ஆன்-லைன்’ மூலம் 2 நாட்கள் நடக்கிறது
பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம், கொரோனா விழிப்புணர்வு போட்டி ‘ஆன்-லைன்’ மூலம் 2 நாட்கள் நடக்கிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வராமல் தடுக்க தற்போது மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலம் முழுவதும் தொடர் பிரசாரங்களை முன்னெடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து தொடங்கி வைத்தார்.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், போட்டிகள் நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தீவிர விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (5-ந் தேதி) மற்றும் நாளை (6-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் கொரோனா விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு போட்டிகள் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்-லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/online-services/comp/home.jsp என்ற இணையதள இணைப்பில் தங்களது படைப்புகளை குறித்த நேரத்தில் பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த 3 படைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வரும் சுதந்திரத் தினத்தன்று (15-ந் தேதி) வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் வழிமுறைகளை மாநகராட்சியின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Related Tags :
Next Story