வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கல்லூரி பேராசிரியரிடம் நூதன திருட்டு
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கல்லூரி பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ். குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மகேஷ்வரியின் கணவர் அன்பழகன் (வயது 58). இவர், சென்னை பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
இவரது செல்போன் எண்ணுக்கு 3 எண்களில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி, வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்கள் வங்கி கணக்கு காலாவதி ஆகிவிட்டது. உடனடியாக அதனை புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
பின்னர் அன்பழகனிடம் அவரது வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்கினார். பின்னர் அவரது செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் வாங்கி விட்டு, உங்கள் கணக்கு புதுப்பிக்கப்பட்டுவிட்டது என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
பேராசிரியரும் வங்கி அதிகாரிகள்தான் பேசியதாக நினைத்து விட்டார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர்தான் மர்மநபர், தன்னிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்த பணத்தை திருடியதை அறிந்தார். இதுபற்றி விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி ஆசாமியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story