கோவில் குளத்தில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி


கோவில் குளத்தில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
x

நண்பர்களுடன் குளித்தபோது கோவில் குளத்தில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர் 54-வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா. இவர், நாட்டு மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள்.

இவர்களில் 3-வது மகன் ராகுல் (வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த ராகுல், நேற்று முன்தினம் மாலை வியாசர்பாடி சாமியார்தோட்டம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த கோவில் குளத்தில் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து குளித்தார்.

அப்போது ராகுல், சேற்றில் சிக்கியதால் நீரில் மூழ்கினார். வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் பயந்துபோன சக நண்பர்கள், வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதுகுறித்து யாருக்கும் தகவல் சொல்லவில்லை. வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த ராகுலின் பெற்றோர், மகனை காணாமல் பல்வேறு இடங்களில் தேடினர்.

பின்னர் சகநண்பர்களிடம் சென்று விசாரித்தபோது அதில் ஒருவர் மட்டும் ராகுல் குளத்தில் மூழ்கியதை கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வியாசர்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள், குளத்தில் மூழ்கிய சிறுவனை தேடினர். சுமார் 3 மணிநேர தேடுதலுக்கு பிறகு ராகுலை பிணமாக மீட்டனர். குளத்தில் குளித்தபோது சேற்றில் சிக்கிய அவர், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டது தெரிந்தது.

வியாசர்பாடி போலீசார் பலியான ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story