கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு கோவில்கள் மீண்டும் திறப்பு


கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு கோவில்கள் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 5 Aug 2021 5:34 PM IST (Updated: 5 Aug 2021 5:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு கோவில்கள் மீண்டும் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி.

சென்னை,

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

3 நாட்கள் தரிசனம் ரத்து

மகத்துவம் தரும் ஆடி, பக்திக்கு உகந்த மாதமாகும். இந்த ஆடி மாதத்தில் கோவில்களில் திருவிழாக்கள், அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல், தீ மிதி திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் இல்லாமலே பூஜைகள் நடத்தவும், அதை இணையதளத்தில் ஒளிபரப்பவும் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே கொரோனா தொற்று கடந்த மாதத்தில் வெகுவாக குறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குச் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும், ஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமையில் இருந்து 3 நாட்களுக்கு கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மீண்டும் திறக்கப்பட்ட கோவில்கள்

பல இடங்களில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இருப்பினும் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நின்று, இறைவனை தரிசனம் செய்து திரும்பிய காட்சிகளை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டு, தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், காளிகாம்பாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மகிழ்ச்சி

கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக சமூக இடைவெளியுடன் கூடிய தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், கந்தகோட்டம், காளிகாம்பாள் கோவில்களில் நேற்று திரளான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல், அனைத்து கோவில்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, ‘3 நாட்களுக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்தனர்.

Next Story