மக்களைத்தேடி மருத்துவ திட்டம்
அம்மையநாயக்கனூரில் மக்களைத்தேடி மருத்துவ திட்ட முகாமை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
கொடைரோடு:
மக்களைத்தேடி மருத்துவ திட்டம்
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில், தமிழக அரசின் மக்களைத்தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மக்களைத்தேடி மருத்துவம் என்ற திட்டத்தை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த ஆட்சி, மக்களுக்கான ஆட்சி.
உலக அளவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருகில் உள்ள கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
4 ஆயிரம் காலிப்பணியிடங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதியில் 100 சதவீத தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பஸ் வசதி இல்லாத அனைத்து ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும்.
கடந்த தி.மு.க. ஆட்சிகாலத்தில் சிறுமலையாறு நீர்த்தேக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிலக்கோட்டை தொகுதியில் செயல்படுத்தப்பட்டன. அம்மையநாயக்கனூரில் உள்ள புகழ்பெற்ற கதலி நரசிங்கப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்ன சமுத்திர கண்மாய் உள்ளிட்ட அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். கூட்டுறவுத்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் கடனுதவி அளிக்கப்படும்.
இவ்வாறு இ.பெரியசாமி பேசினார்.
மருத்துவ பெட்டகங்கள்
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவ சிகிச்சையில் உள்ள நபர்களை வீடு, வீடாக தேடிச்சென்று மருத்துவ பெட்டகங்களை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி படத்தொகுப்புகளை அவர் பார்வையிட்டார்.
மேலும் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் வாகனத்தை, கொடி அசைத்து அவர் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார்.
Related Tags :
Next Story