தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பயன்பாட்டுக்கு மின்சாரத்தில் இயங்கும் கார்கள் அறிமுகம்


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பயன்பாட்டுக்கு மின்சாரத்தில் இயங்கும் கார்கள் அறிமுகம்
x
தினத்தந்தி 5 Aug 2021 2:08 PM GMT (Updated: 2021-08-05T19:38:40+05:30)

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்திய பெருந்துறைமுகங்களில் முதன்முதலாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பயன்பாட்டுக்காக மின்சாரத்தில் இயங்கும் இ-கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி:
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்திய பெருந்துறைமுகங்களில் முதன்முதலாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பயன்பாட்டுக்காக மின்சாரத்தில் இயங்கும் இ-கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இ-கார்கள்

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்தும் வகையில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் பாதுகாப்பான, நிலையான மற்றும் பசுமையான கடற்சார் துறையாக வழிநடத்துவதற்கு உறுதி எடுத்துள்ளது. 

இதனால் சுத்தமான எரிபொருள் செயல்பாடுகளின் கார்பன் வெளியேற்றத்தை குறைத்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்திய பெருந்துறைமுகங்களில் முதன்முதலாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பயன்பாட்டுக்காக மின்சாரத்தில் இயங்கும் 3 இ-கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 
இந்த கார்கள் மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து 6 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பெறப்படுகிறது.

21.50 கிலோ வாட் பேட்டரி

இந்த மின்சார கார்களில் 21.50 கிலோ வாட் லித்தியம் அயன் சார்ஜிங் திறன் கொண்ட பேட்டரி அமைக்கப்பட்டு உள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 231 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும். ஒரே நேரத்தில் 3 கார்களையும் சார்ஜ் செய்யும் வகையில் சார்ஜர் அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் 8 மணி நேரம் சார்ஜ் செய்தால் பேட்டரி 100 சதவீதம் முழுமையாக சார்ஜ் ஆகும். இந்த ஒவ்வொரு இ-காரும் ஆண்டுக்கு 1.5 டன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும்.

முதன்முதலாக அறிமுகம்

இந்த இ-கார்கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடந்தது. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி இ-கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, தலைமை எந்திர பொறியாளர் சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். எனர்ஜி எபிசியன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவன நிர்வாக துணைத்தலைவர் சவுரப்குமார், காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘‘வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் மின்இயக்க திட்ட முயற்சிகளுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளோம். 
அரசு நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மின்சாரத்தால் இயங்க கூடிய இருசக்கர வாகனங்களை சமமான மாதாந்திர தவணை முறை மற்றும் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யும் முறையில் வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்தி அதன்மூலம் மின்-இயக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் பேசியதாவது:-

மின்சார தேவை

வ.உ.சி. துறைமுகம் பல்வேறு பசுமை துறைமுக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் 5 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலையை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த ஆலைக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 

மேலும், துறைமுக பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியதில் இந்திய பெருந்துறைமுகங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முதலாவதாக இருப்பது பெருமைகுரியதாகும். மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தினால் செயல்படுத்தப்படும் அனைத்து பசுமை மின் உற்பத்தி திட்டங்களினால் பெறப்படும் மின்சாரம் (சூரியமின் ஆலை மற்றும் காற்றாலை) தயாரிக்கும் பணிகள் முடியும் தருணத்தில், இதனால் கிடைக்க பெறும் மின்சாரத்தின் மூலம் துறைமுகத்தின் 100 சதவீதம் மின்சார தேவை பூர்த்தி அடைந்து விடும்.

இதன்மூலம் துறைமுகத்துக்கு தேவையான மின் ஆற்றல் பூர்த்தியடையும். எல்.என்.ஜி. பங்கரிங் வசதி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களை செயல்படுத்தி, இந்திய பெருந்துறைமுகங்களிலேயே முதல் பசுமை துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் விரைவில் திகழ உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story