காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கைகலப்பு
கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதில், முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதில், முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் காயம் அடைந்தனர்.
புதிய நிர்வாகிகள் நியமனம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக நியமிக்கப்பட்டனர். இதில் மாவட்ட துணை தலைவராக இருந்த வக்கீல் அய்யலுசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலருக்கு மீண்டும் பதவி வழங்கப்படவில்லை.
இதனால் அவரது தலைமையில் ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து ‘காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏன் உங்களை நீக்கக்கூடாது?’ என்று அய்யலுசாமிக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தர்ணா போராட்டம்
இந்த நிலையில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் மற்றும் நகர, வட்டார தலைவர்கள் அறிமுக கூட்டம், கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது காந்தி மண்டபத்தின் முன்பாக அய்யலுசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் வட்டார தலைவர் செல்லத்துரை உள்ளிட்டவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள், திடீரென்று காந்தி மண்டபத்துக்குள் புகுந்து, மேடையின் அருகில் சென்று, மாவட்ட தலைவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
2 பேர் காயம்
இ்ந்த மோதல் பற்றி அறிந்ததும் மண்டபத்துக்குள் போலீசார் புகுந்து, அய்யலுசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை வெளியே அழைத்து வந்தனர்.
பின்னர் காங்கிரசார் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி அய்யலுசாமி, செல்லத்துரை ஆகிய 2 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story