தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில் சிறப்பு திருப்பலி


தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில் சிறப்பு திருப்பலி
x
தினத்தந்தி 5 Aug 2021 8:16 PM IST (Updated: 5 Aug 2021 8:16 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில் சிறப்பு திருப்பலி பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில் சிறப்பு திருப்பலி பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

பனிமயமாதா பேராலய திருவிழா

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலய 439-வது பெருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு காரணமாக, தொடர்ந்து 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடைபெற்றது.
தொடர்ந்து 11 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் பேராலயத்தில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை போன்ற வழக்கமான வழிபாடுகள் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

10-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது.

திருவிழா திருப்பலி

விழாவின் சிகர நாளான நேற்று பனிமயமாதா அன்னையின் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலையுடன் வழிபாடுகள் தொடங்கின. காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா உள்ளிட்ட பல்வேறு அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.

காலை 10 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட பிஷப் நசரேன் தலைமையிலும், காலை 11.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. இந்த திருப்பலிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியுப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவற்றை பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே கண்டு வழிபட்டனர்.

சப்பர பவனி ரத்து

வழக்கமாக 10-ம் திருவிழா இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்திலும், 11-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளிலும் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறும். ஆனால், 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக சப்பர பவனி ரத்து செய்யப்பட்டது. அன்னையின் சப்பரம் அலங்கரிக்கப்பட்டு பேராலயத்தின் உள்ளேயே வைக்கப்பட்டு இருந்தது.

ஆலய திருவிழாவையொட்டி, பக்தர்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால், பேராலயத்துக்கு பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில், அனைத்து சாலைகளிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில், சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story