தேனி பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தேனியில் உள்ள பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அப்போது அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.
தேனி:
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. பயணிகள் வெயில், மழைக்கு ஒதுங்கி நிற்பதற்கு கூட போதிய இடமின்றி ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இந்த 2 பஸ் நிலையங்களிலும் உள்ள வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றினர்.
வாக்குவாதம்
பின்னர் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் நகராட்சி ஏலம் விட்ட கடைகளுக்கு முன்பு ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றினர். அப்போது வியாபாரிகள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்றும், தங்களுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. பஸ் நிலையத்தில் கட்டிட ஆக்கிரமிப்பு, கடைகள் ஆக்கிரமிப்பு என இரு வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் கடை ஆக்கிரமிப்புகளை மட்டும் அதிகாரிகள் அகற்றினர். நடைபாதையை ஆக்கிரமித்து படிக்கட்டுகள் கட்டியிருப்பது மற்றும் கடைகளை விரிவாக்கம் செய்து இருப்பது போன்றவற்றை அகற்றவில்லை. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ததில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story