கடலூரில் நடந்த 2-ம் நிலை உடற்தகுதி தேர்வில் இருந்து 9 விதவை பெண்கள் வெளியேற்றம்


கடலூரில் நடந்த 2-ம் நிலை உடற்தகுதி தேர்வில் இருந்து 9 விதவை பெண்கள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 5 Aug 2021 10:04 PM IST (Updated: 5 Aug 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடந்த 2-ம் நிலை உடற்தகுதி தேர்வில் இருந்து 9 விதவை பெண்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் கதறி அழுது போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த மாதம் 26-ந்தேதி முதல் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது.

முதலில் ஆண்களுக்கான முதல் கட்ட உடற்தகுதி முடிவடைந்த நிலையில் அதில், 1822 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. நேற்று விதவைகள் உள்பட 248 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி அவர்கள் நேற்று அதிகாலை 4 மணிக்கு வந்து காத்திருந்தனர். பின்னர் அவர்கள் காலை 6 மணிக்கு விளையாட்டு மைதானத்திற்குள் அழைக்கப்பட்டனர்.

9 பேர் வெளியேற்றம்

அங்கு அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதில், 9 விதவை பெண்கள் விதவைக்கான சான்றிதழும், ஆதரவற்றோர் விதவை சான்று வைத்திருந்த பெண்கள், கோட்டாட்சியர், சப்-கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாமல், தாசில்தார் கையெழுத்து பெற்று சான்றிதழ் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதனால் அவர்கள் 9 பேரையும் உடற்தகுதி தேர்வில் இருந்து அங்கிருந்த போலீசார் வெளியேற்றினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், போலீசாரிடம் நீண்ட நேரம் முறையிட்டனர். ஆனால் போலீசார் திட்டவட்டமாக மறுத்து அவர்களை வெளியேற்றினர்.

போராட்டம்

இதையடுத்து அவர்களில் 5 பேர், அண்ணா விளையாட்டு மைதானத்தில் இருந்து வெளியேறி, கண்ணீர் விட்டு கதறி அழுது போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு மீண்டும் தேர்வில் பங்கேற்க அனுமதி தர வேண்டும் என்றனர்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், 2-ம் நிலை காவலர் தேர்வு விண்ணப்பத்தில், விதவை, ஆதரவற்றோர் விதவைச்சான்றிதழ் வைத்தால் போதும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி விதவைச்சான்றிதழ் வைத்துள்ளோம். ஆனால் இப்போது ஆதரவற்றோர் விதவைச்சான்று வேண்டும் என்கிறார்கள். அந்த சான்றிதழ் வைத்திருந்த பெண்களிடம் தாசில்தார் கையெழுத்து செல்லாது என்கிறார்கள். இதை நாங்கள் விண்ணப்பிக்கும் போதே தெளிவாக குறிப்பிட்டு இருந்தால், அதற்கேற்ப சான்றிதழ் வாங்கி வந்திருப்போம்.

இப்போது எங்களை வெளியே அனுப்பி விட்டார்கள். இதை நம்பி தான் நாங்கள் இருந்தோம். இனி கூலி வேலைக்கு சென்று தான் குடும்பம் நடத்த வேண்டும். இதை முதல்-அமைச்சர் கவனித்து எங்களுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்துவார் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்

இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் கேட்ட போது, விண்ணப்பத்தில்  தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது விதவை சான்றிதழ், ஆதரவற்றோர் விதவை சான்றிதழில் கோட்டாட்சியர் அல்லது சப்-கலெக்டர் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். தாசில்தார் கையெழுத்திட்டால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதையும் மீறி தாசில்தார் கையொப்பம் பெற்ற நபர்களை தேர்வுக்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்கு காலஅவகாசம் அளித்தோம். அவர்கள் வரவில்லை என்றார்.
இருப்பினும் விதவை பெண்கள் கண்ணீருடன் நடத்திய போராட்டத்தால் தேர்வு மையத்திற்கு வெளியே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story