பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் 206 ஊழியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ரூ.3500 முதல் ரூ.8,000 வரை ஊதியம் பெறும் இந்த பணியாளர்களுக்கு இம்மாதம் 5-ந் தேதி ஆகியும் இன்னும் ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தொகுப்பூதிய ஊழியர்கள் நேற்று காலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் பதிவாளர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் ஜூலை மாதத்திற்கான ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். பதிவாளர் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பல்கலைக்கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஊதியம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிரந்தரமாக்கும் கோரிக்கை அரசுக்கு தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கலைந்து சென்றனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story