முன்விரோதத்தில் தொழிலாளி அடித்துக்கொலை
திருமருகல் அருகே முன்விரோதத்தில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே முன்விரோதத்தில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம்
நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகம் இடையாத்தாங்குடி கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன்(வயது55). விவசாய கூலித் தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த உத்திராபதி மகன் ஜெயக்குமார் (29) என்பவரும் இடையாத்தாங்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வருகின்றனர். ஜெயக்குமார் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை புருஷோத்தமன் பயன்படுத்தி வந்தார். இவர்களுக்கு இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
அடித்துக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் புருஷோத்தமன் தான் பயன்படுத்தி வரும் இடத்தில் இருந்த கருவேல மரங்களை வெட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த ஜெயக்குமார் இடம் தொடர்பாக பிரச்சினை உள்ள நிலையில் ஏன் மரங்களை வெட்டுகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து புருஷோத்தமனை தாக்கினார்.
இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், புருஷோத்தமன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
வாலிபர் கைது
இதுகுறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புருஷோத்தமன் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story