வாரத்தின் கடைசி 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை


வாரத்தின் கடைசி 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
x
தினத்தந்தி 5 Aug 2021 4:56 PM GMT (Updated: 5 Aug 2021 4:56 PM GMT)

நாகை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி வரை வாரத்தின் கடைசி 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.

நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி வரை வாரத்தின் கடைசி 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாரத்தின் 3 நாட்கள்...
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிப்பாட்டு தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொது மக்கள் செல்ல ஏற்கனவே தடை விதித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது நிலவிவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களிலும்   பக்தர்கள் தரிசனம் செய்யவும், அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. 
பக்தர்கள் பாதயாத்திரை வர தடை
ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அந்தந்த மத ஆகம விதிகளின்படி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறுவதற்கு தடை ஏதுமில்லை.
மேலும் வருகிற 10-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மற்றும் 11-ந் தேதி(புதன்கிழமை) ஆடிப்பூரத்தை முன்னிட்டும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. 
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு வெளியூரில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட 31-ந் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. 
ஒத்துழைப்பு
கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story