ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியினர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஜனாதிபதி


ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியினர் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஜனாதிபதி
x
தினத்தந்தி 5 Aug 2021 10:54 PM IST (Updated: 5 Aug 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியினர் கலைநிகழ்ச்சிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கண்டு ரசித்தார். பின்னர் அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

ஊட்டி,

ஊட்டி ராஜ்பவனில் பழங்குடியினர் கலைநிகழ்ச்சிகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கண்டு ரசித்தார். பின்னர் அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 3-ந் தேதி வந்தார். இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி ராஜ்பவனில் ஓய்வெடுத்தார். மாலை 5 மணிக்கு மேல் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் ராஜ்பவனில் நடைபெற்றது.

 இதில் தோடர், கோத்தர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினர். தோடர் மக்கள் தங்களது மொழியில் பாட்டு பாடி நடனம் ஆடினர். கோத்தர் இன மக்கள் இசை கருவிகளை இசைத்தபடி நடனத்தை வெளிப்படுத்தினர்.

அதேபோல் படுகர், காட்டுநாயக்கர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி நடனம் ஆடினர். இதனை இருக்கைகளில் அமர்ந்தபடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், மகள் சுவாதி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் கண்டு  ரசித்தனர்.

 நடனமாடியவர்களை ஜனாதிபதி வாழ்த்தி பாராட்டினார். அப்போது பழங்குடியின மக்கள் ஜனாதிபதிக்கு, அவர்கள் நெய்த சால்வையை நினைவு பரிசாக வழங்கினர். தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

விவசாயிகளுடன் கலந்துரையாடல்

தொடர்ந்து ஜனாதிபதி நீலகிரியில் உள்ள தேயிலை விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், நீலகிரியில் பிரதானமான தேயிலை விவசாயம் குறித்து விவசாயிகள் இடையே பேசினார்.

ஜனாதிபதியிடம் விவசாயிகள் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை துறை ரீதியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

இயற்கை வேளாண்மை

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது நீலகிரி இயற்கை வேளாண்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது, 

இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமை கொடுப்பது குறித்து கேட்டறிந்தார். இயற்கை விவசாயத்தில் நீலகிரியை முதன்மை மாவட்டமாக மாற்ற விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு செல்கிறார். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

Next Story