தேசிய நெல் திருவிழா தொடங்கியது


தேசிய நெல் திருவிழா தொடங்கியது
x
தினத்தந்தி 5 Aug 2021 11:26 PM IST (Updated: 5 Aug 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில், தேசிய நெல் திருவிழா தொடங்கியது. இதில் 174 வகையான நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில், தேசிய நெல் திருவிழா தொடங்கியது. இதில் 174 வகையான நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 
174 நெல் ரகங்கள் 
கடந்த 2007-ம் ஆண்டு மறைந்த நம்மாழ்வார், பாரம்பரிய நெல் திருவிழாவை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நெல் திருவிழாவை மறைந்த நெல் ஜெயராமன் நடத்தி வந்தார். தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து வந்த மறைந்துபோன நெல் ரகங்களை மீட்பதை இந்த நெல் திருவிழாவின் நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
 10-க்கும் மேற்பட்ட மறைந்துபோன நெல் ரகங்களை கொண்டு இந்த நெல் திருவிழா தொடங்கப்பட்டது. தற்போது மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, காட்டுயானம், யானைக்கவுனி, சீரக சம்பா, கருடன் சம்பா, தூயமல்லி, குள்ளக்கார் உள்ளிட்ட 174 நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த நெல் ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  
நெல் திருவிழா 
இந்த ஆண்டு 15-வது பாரம்பரிய நெல் திருவிழா திருத்துறைப்பூண்டியில் நேற்று தொடங்கியது. விழாவை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி. ராஜா, மாரிமுத்து, மாநில வளர்ச்சிக்குழு தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், நவீன் டிராக்டர்ஸ் பிரபாகரன் மற்றும் மூத்த வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
விவசாயிகள் ஊர்வலம்
விழாவிற்கு திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் இருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு நெல் கோட்டை வைத்து மாட்டு வண்டியில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர். 
விழாவில் பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து  இயற்கை முறையில் சாகுபடி செய்யும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
அரங்குகள் 
முன்னதாக விழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் வைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டனர். 
இதில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் இயற்கை பாரம்பரிய நெல் ரகங்கள் 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து அடுத்த ஆண்டு 4 கிலோவாக திருப்பி அளிப்பார்கள். 

Next Story