வேட்டைக்கு சென்றபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி சாவு


வேட்டைக்கு சென்றபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 6 Aug 2021 12:13 AM IST (Updated: 6 Aug 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக வேட்டைக்கு சென்றபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனியை சேர்ந்தவர் அபீப் (வயது 51). இவர் கடந்த 1-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடுதிரும்பவில்லை. இந்த நிலையில் மறுநாள் அவர் காட்டிமட்டம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் கூர்மையான ஆயுதம் குத்தப்பட்ட அடையாளம் இருந்தது.

இதனால் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷீஷ் ராவத் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம், இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் தனிப்படை போலீசார் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாரா அல்லது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின்பேரில், அவரது நண்பர்களான தேவாலா பகுதியைச் சேர்ந்த அஸ்ரப் (40), ரதீஸ் (23) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சம்பவத்தன்று அபீப், அஸ்ரப், ரதீஸ் ஆகியோர் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாட காட்டிமட்டம் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது வனவிலங்குகள் எதுவும் தென்படவில்லை. இதனால் அவர்கள் 3 பேரும் ஏமாற்றத்துடன் வனப்பகுதியில் திரும்பி வந்தனர்.

இதில், மேடான பகுதியில் இருந்து கீழே இறங்கும்போது, அபீப் தனது கையில் இருந்த துப்பாக்கியை அஸ்ரப்பிடம் கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி விசையில் கைப்பட்டு, துப்பாக்கியில் இருந்து அபீப் மார்பில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்ரப், ரதீஸ் ஆகியோர் போலீசாருக்கு பயந்து அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர் என்று தெரிவித்தனர். 

தொடர்ந்து தேவாலா போலீசார் தொழிலாளி மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி, இதுதொடர்பாக அஸ்ரப், ரதீஸ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஆசீப் (25) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். வேட்டைக்கு சென்றபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story