கூடலூர் அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூர் அருகே வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தியது. தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் தொரப்பள்ளி, புத்தூர்வயல், ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சி பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து வீடுகள், விவசாய பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையில், காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதியளித்தனர்.
இதையடுத்து கூடலூர், முதுமலை எல்லையோரம் பல இடங்களில் வனத்துறையினர் இரவு முகாமிட்டு தீ மூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கிச்சலூர் பகுதிக்குள் காட்டு யானை நுழைந்தது. தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பிந்து, குட்டன் உள்பட பல விவசாயிகளின் தோட்டங்களில் வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
தொடர்ந்து தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களையும் நாசம் செய்தது. இதையறிந்த பொதுமக்கள் திரண்டு வந்த காட்டு யானையை விரட்டி அடித்தனர். காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்த நிலையில் மீண்டும் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க அகழி தோண்டப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர். மேலும் இரவில் தீ மூட்டி கண்காணித்து வருகின்றனர்.
இருப்பினும் யானை ஊருக்குள் வருவது தொடர்கிறது. எனவே வனத்துறையினர் பணியை விரைவுபடுத்தி காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story