கோவிலில் திருட்டு முயற்சி


கோவிலில் திருட்டு முயற்சி
x
தினத்தந்தி 5 Aug 2021 8:25 PM GMT (Updated: 5 Aug 2021 8:25 PM GMT)

கோவிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள், உண்டியல் பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றமடைந்தனர்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த நாயகனைப்பிரியாள் கிராமத்தில் வாணதிரையன்பட்டினம் செல்லும் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரியான அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60), நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை ேகாவிலுக்கு வந்த அவர், கதவை திறந்து உள்ளே சென்று கோவிலை சுத்தப்படுத்தியபோது வாசல் கதவின் அருகில் உள்ள சுவற்றில் உண்டியல் இருக்கும் பகுதியின் இரும்புக் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உண்டியலை பார்த்தபோது உண்டியல் உடைக்கப்படாமல் இருந்தது. பின்னர் இதுபற்றி ஊர் மக்களுக்கும், தா.பழூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது.
ேபாலீசார் விசாரணையில், திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் கோவில் சுற்றுச்சுவரின் மேலே ஏறி உள்ளே குதித்து சுவற்றின் உட்புறத்தில் உள்ள உண்டியலின் பூட்டை கடப்பாரை கொண்டு உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர், என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரி சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் இந்த கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கோவில் உண்டியல் பூட்டு சற்று பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற சம்பவத்தை தடுக்க கோவில் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story