பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி


பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
x
தினத்தந்தி 6 Aug 2021 1:56 AM IST (Updated: 6 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

அவதூறு பேச்சு வழக்கில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

நாகர்கோவில்:
அவதூறு பேச்சு வழக்கில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. 
சர்ச்சைக்குரிய பேச்சு
குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, மதம் பற்றியும் அவதூறாக பேசியிருந்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து பாதிரியார் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
பாதிரியார் ஜாமீன் மனு
பின்னர் வெளிமாவட்டத்திற்கு தப்பி செல்ல முயன்ற போது 24-ந் தேதி அவரை போலீசார் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவுபடி பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
இந்த நிலையில் பாதிரியார் தரப்பில் ஜாமீன் கேட்டு குழித்துறை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த மாதம் 30-ந் தேதி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
மீண்டும் தள்ளுபடி
இதனை தொடர்ந்து மீண்டும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கோர்ட்டில் அவர் சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுவை மாவட்ட நீதிபதி அருள்முருகன் விசாரித்தார். 
அப்போது, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story