ஆடி திருவாதிரை விழாவையொட்டி பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவையொட்டி கோவிலில் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மீன்சுருட்டி:
ஆடி திருவாதிரை விழா
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு அரண்மனை அமைத்து மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தார். அவரால் கட்டப்பட்ட பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவில், யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, தமிழர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளும் பொக்கிஷமாக இன்றளவும் விளங்குகிறது.
இக்கோவிலில் மாமன்னர் ராஜேந்திரசோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரையை முன்னிட்டு நேற்று ஆடி திருவாதிரை விழா நடைபெற்றது. இதையொட்டி பிரகதீஸ்வரர் மற்றும் பிரகன் நாயகிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மலர் தூவி வணங்கினர்
முன்னதாக கோவில் வளாகத்தின் வாயிலில் ராஜேந்திர சோழனின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதற்கு பலரும் மலர் தூவி வணங்கினர். இந்நிகழ்ச்சிகளில் மத்திய தொல்லியல் துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ், உதவி பொறியாளர் கலைச்செல்வன், தஞ்சை தொல்லியல் துறை பராமரிப்பு உதவியாளர் சங்கர், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிலம்பரசன், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் கோமகன் மற்றும் அரசு அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story