யானை சுதை சிலை பராமரிப்பு பணிகள் தீவிரம்


யானை சுதை சிலை பராமரிப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 6 Aug 2021 1:56 AM IST (Updated: 6 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

புராதன சின்னமான யானை சுதை சிலையை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மீன்சுருட்டி:

யானை சுதை சிலை
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்த கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள சலுப்பை கிராமத்தின் எல்லையில் துறவுமேல் அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு முன்பு கி.பி. 16-17-ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட சுமார் 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட யானை சுதை சிலை உள்ளது.
நின்ற நிலையில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் இந்த யானை சுதை சிலையின் கால்களுக்கு இடையே 3 பேர் தாளமிடும் கோலத்திலும், உள் பக்கத்தில் தும்பிக்கையை தாங்கி ஒருவர் நிற்பது போன்றும், அவருடைய கால் யானையின் கால் அடியில் சிக்கி இருப்பது போன்றும் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பராமரிப்பு பணிகள்
இந்த சிலையானது ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யானை சுதை சிலையை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக அறிவித்துள்ளது. மேலும் இச்சிலையை பாதுகாக்க பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சாரம் அமைத்து சிலையை சுற்றிலும் மற்றும் சிலையின் மீது படிந்துள்ள கறைகளை நீக்குவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் துறவுமேல் அழகர் கோவிலை சுற்றி பல்வேறு சிற்பங்கள் தொழில்நுட்பத்துடனும், கலைநயத்துடனும் காட்சி அளிக்கிறது. இதனால் யானை சிலையை காணவும், சிற்பங்களை காணவும், வழிபாடு செய்யவும் என இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து ரசித்து செல்கின்றனர்.

Next Story