கல்லாவியில் பரபரப்பு: ஊராட்சி செயலாளர் அறைக்கு பூட்டு போட்ட தலைவர்


கல்லாவியில் பரபரப்பு: ஊராட்சி செயலாளர் அறைக்கு பூட்டு போட்ட தலைவர்
x
தினத்தந்தி 6 Aug 2021 1:56 AM IST (Updated: 6 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

கல்லாவி ஊராட்சியில் தலைவருக்கும், ஊராட்சி செயலாளருக்கும் இடையே தொடர் மோதல் போக்கால் ஊராட்சி செயலாளரை வெளியே அனுப்பிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை தலைவர் பூட்டு போட்டு பூட்டினார்.

கல்லாவி
கல்லாவி ஊராட்சி
ஊத்தங்கரை ஒன்றியம் கல்லாவி ஊராட்சி மன்ற தலைவராக ராமன், ஊராட்சி செயலாளராக செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர். கல்லாவி ஊராட்சியில் பல மாதங்களாக தலைவருக்கும், ஊராட்சி செயலாளருக்கும் இடையே பணம் செலவு பண்ணுவதிலும், பணம் எடுப்பதிலும் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. 
இது தொடர்பாக ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பலமுறை இரண்டு தரப்பினர் இடையே பேசி ஊராட்சியில் மக்கள் பிரச்சினையில் எந்தவித தொய்வு ஏற்படாமல் இருக்கவும், வரவு, செலவு கணக்குகளில் பிரச்சினையில்லாமல் இருக்கவும் அறிவுறுத்தி சென்றனர். 
அறையை பூட்டினார்
இந்த நிலையில் நேற்று ஊராட்சி செயலாளர் வழக்கம்போல தன்னுடைய அறையில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து அறையில் இருந்த தலைவர் ராமன் ஊராட்சி செயலாளரை வரச்சொல்லி அழைத்தார். இதையடுத்து ஊராட்சி செயலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்தவுடன், அந்த அறையின் கதவை பூட்டு போட்டு ஊராட்சி தலைவர் பூட்டி விட்டார். 
இதை எதிர்பாராத ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்குமரனிடம் நடந்ததை கூறி முறையிட்டார்.
இதுகுறித்து தலைவர் ராமனிடம் கேட்டபோது, ‘கல்லாவி ஊராட்சி நிர்வாகத்திற்கு ஊராட்சி செயலாளர் ஒத்துழைப்பு தருவதில்லை. அதனால் அவருடைய பணி எங்களுக்கு தேவை இல்லை என்று அறையை பூட்டி விட்டேன்’ என்றார்.
விசாரித்து நடவடிக்கை
இதுகுறித்து ஊராட்சி செயலாளர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘நான் ஊராட்சி பணிகளை சிறப்பாக செய்து வருகிறேன். முறையாக செலவு செய்த கணக்குகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஊராட்சி பணத்தை தருகிறேன். மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்யப்படும் செலவுகளுக்கு உடனடியாக பணம் கொடுக்கப்படுகிறது. என்னால் எந்தவிதமான தாமதமும் ஏற்படவில்லை’ என்றார்.
இந்த மோதல்போக்கு குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்குமரனிடம் கேட்டபோது, ‘ இந்த பிரச்சினை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
ஊராட்சி மன்ற தலைவரே, ஊராட்சி செயலாளரின் அறையை பூட்டிய சம்பவம் கல்லாவியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story