நெல்லையில் கொரோனா பரிசோதனைக்கு கேரளாவில் இருந்து வந்த பயணிகள் எதிர்ப்பு


நெல்லையில் கொரோனா பரிசோதனைக்கு கேரளாவில் இருந்து வந்த பயணிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 2:26 AM IST (Updated: 6 Aug 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இருந்து வந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சாலை மார்க்கமாக தமிழகம் வரும் பயணிகளை மாநில எல்லைகளில் தமிழக போலீசார், சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்று இல்லை என்ற சான்று அல்லது தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
 
இதேபோன்று கேரளாவில் இருந்து ரெயில்களில் வரும் பயணிகளுக்கும் அந்தந்த ரெயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மாநகராட்சி மருத்துவ குழுவினர், கேரளா உள்ளிட்ட வெளிமாநில பயணிகளை கண்காணித்து, கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர். ரெயில்களில் வரும் அனைத்து பயணிகளுக்கும் உடல்வெப்பநிலை பரிசோதனை நடத்தவும், தேவைப்படுகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவும் செய்கின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அந்த ரெயிலில் வந்த 150-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை முடிவு சான்று, கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இந்த சான்று இல்லாதவர்களை மருத்துவ குழுவினர் தடுத்து நிறுத்தி, கொரோனா பரிசோதனைக்கு வருமாறு அழைத்தனர். இதில் ஒருசிலர் மட்டுமே பரிசோதனைக்கு வந்தனர். மற்றவர்கள் பரிசோதனைக்கு பயந்து மருத்துவ குழுவினரிடம் சிக்காமல் வீட்டுக்கு செல்வதிலேயே குறிக்கோளாக இருந்தனர். அவர்கள் திடீரென்று வேறு வழியாக ஓட்டம் பிடித்தனர்.
 
அவர்களை மருத்துவ குழுவினர் தடுத்து நிறுத்தி பரிசோதனைக்கு வருமாறு கூறினர். ஆனால், பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பயணிகள், மருத்துவ குழுவினரிடம் தங்களுக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதேபோல் தமிழக-கேரள எல்லையான புளியரை கொரோனா தடுப்பு மருத்துவ சோதனைச்சாவடியில் மருத்துவ குழுவினர் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, கேரளாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன. அவற்றை நிறுத்தி கொரோனா இல்லை என்ற சான்று, தடுப்பூசி போட்டதற்கான சான்று இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர். சான்று வைத்திருந்தவர்கள் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கபட்டனர். 21 வாகனங்களும், அதில் வந்தவர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story