ஜமீர் அகமதுகான், ரோசன் பெய்க் வீடு, அலுவலகங்களில் அமலாக்க துறையினர் சோதனை
பெங்களூருவில் நகைக்கடை அதிபர் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜமீர் அகமதுகான், முன்னாள் மந்திரி ரோசன் பெய்க் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பெங்களூரு: பெங்களூருவில் நகைக்கடை அதிபர் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜமீர் அகமதுகான், முன்னாள் மந்திரி ரோசன் பெய்க் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
ரூ.4 ஆயிரம் கோடி மோசடி
பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடைகள் நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர், தான் நடத்தி வந்த நகைக்கடையில் நகை சிறுசேமிப்பு திட்டத்திற்காக பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்திருந்தார். அவ்வாறு வசூலித்திருந்த ரூ.4 ஆயிரம் கோடியை பொதுமக்களுக்கு திரும்ப கொடுக்காமல் மன்சூர்கான் மோசடி செய்திருந்தார்.
இந்த மோசடியில் கர்நாடகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான விஜய்சங்கர், ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஹேமந்த் நிம்பால்கர், அஜய் ஹிலோரி, போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதும், அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க, கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி தற்கொலை
கடந்த 2019-ம் ஆண்டு துபாயில் இருந்து டெல்லி திரும்பிய மன்சூர்கானை போலீசார் கைது செய்திருந்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். அதே நேரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதும், முன்னாள் மந்திரியான ரோசன் பெய்க் மீதும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த மோசடி விவகாரத்தில் சிக்கியதால் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்சங்கர் கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூருவில் தற்கொலை செய்திருந்தார்.
முன்னாள் மந்திரி ரோசன் பெய்க்கும் சி.பி.ஐ. அதிகாரியாக கைது செய்யப்பட்டு இருந்தார். மன்சூர்கானிடம் இருந்து அவர், பல கோடி ரூபாய் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், தற்போது ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார். இதற்கிடையில், நகைக்கடை அதிபர் மன்சூர்கான் ரூ.4 ஆயிரம் மோசடி செய்த வழக்கு குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டை விற்றதில் முறைகேடு
இந்த நிலையில், மன்சூர்கான் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி செய்ததில் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜமீர் அகமதுகானுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதாவது ரிச்மவுண்ட் ரோட்டில் உள்ள ரூ.90 கோடி மதிப்பிலான பங்களாவை, மன்சூர்கானுக்கு ஜமீர் அகமதுகான் விற்று இருந்தார். ஆனால் ரூ.9.36 கோடிக்கு தான் விற்று இருப்பதாக மாநகராட்சிக்கு ஜமீர் அகமதுகான் தெரிவித்திருந்தார்.
இந்த வீட்டை விற்றதில் வரி ஏய்ப்பு, பிற முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக 3 மாதங்களுக்கு முன்பாகவே ஜமீர் அகமதுகானிடம் அமலாக்கத்துறையினர் விசாரித்து தகவல்களை பெற்றிருந்தனர். அப்போது அவர் சரியான தகவல்களை தெரிவிக்காததுடன், அதுபற்றி விவரம் அளிக்க 3 மாதம் அவகாசம் கேட்டு இருந்தார். ஆனாலும் ஜமீர் அகமதுகான் முறையான ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் வழங்கவில்லை என்று தெரிகிறது.
அமலாக்கத்துறை சோதனை
இந்த நிலையில், ரூ.4 ஆயிரம் கோடி மோசடி வழக்கு விவகாரத்தில் பெங்களூருவில் உள்ள ஜமீர் அகமதுகானுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் நேற்று டெல்லியில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதாவது அவருக்கு சொந்தமான 6 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருந்தது. காலை 5 மணிக்கே இந்த சோதனையை அமலாக்காத்துறை அதிகாரிகள் தொடங்கி இருந்தனர்.
அதாவது ஜமீர் அகமதுகானுக்கு சொந்தமான பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் அருகே பம்பு பஜாரில் உள்ள அரண்மனை போன்ற வீடு, கலாசி பாளையாவில் உள்ள நேஷனல் டிராவல்ஸ் அலுவலகம், வசந்த்நகரில் உள்ள வீடு, சதாசிவநகரில் உள்ள ஜமீர் அகமதுகானின் ஆதரவாளருக்கு சொந்தமான வீடு, கப்பன்பார்க் அருகே யூ.பி.சிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிளாட், கோல்ஸ்பார்க் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.
ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
இந்த சோதனையின் போது ஜமீர் அகமதுகான் தன்னுடைய வீட்டிலேயே இருந்தார். அவரிடமும், அவருடைய குடும்பத்தினரிடம் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்போன்களை வாங்கி கொண்டனர். வீட்டுக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. அவரது வீடு முழுவதையும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story