அரவிந்த் லிம்பாவளிக்கு மாநில பா.ஜனதா தலைவர் பதவி?


அரவிந்த் லிம்பாவளிக்கு மாநில பா.ஜனதா  தலைவர் பதவி?
x
தினத்தந்தி 5 Aug 2021 9:01 PM GMT (Updated: 2021-08-06T02:31:51+05:30)

முன்னாள் மந்திரி அரவிந்த் லிம்பாவளிக்கு மாநில பா.ஜனதா தலைவர் பதவி வழங்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு: முன்னாள் மந்திரி அரவிந்த் லிம்பாவளிக்கு மாநில பா.ஜனதா தலைவர் பதவி வழங்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆட்சியை பிடிக்க முடியும்

எடியூரப்பா மந்திரிசபையில் கன்னட வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல்துறை மந்திரியாக பணியாற்றியவர் அரவிந்த் லிம்பாவளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் மந்திரியாக பதவி ஏற்றார். நீண்டநாள் காத்திருப்புக்கு பிறகே அவருக்கு அந்த பதவி கிடைத்தது. பா.ஜனதாவில் அவர் முன்னணி தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். அப்படி இருந்தும் புதிய மந்திரிசபையில் அவருக்கு இடம் வழங்காதது பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. அவருக்கு மந்திரி பதவி வழங்காததன் பின்னணி குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக பா.ஜனதா தலைவராக உள்ள நளின்குமாரை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக தலித் சமூகத்தை சேர்ந்த அரவிந்த் லிம்பாவளிக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. தலித் ஒருவருக்கு கட்சி தலைவர் பதவி வழங்குவதன் மூலம் தலித் மக்களின் ஓட்டுகளை பெற முடியும் என்று பா.ஜனதா நம்புகிறது. இதன் மூலம் வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும் என்று பா.ஜனதா கணக்கு போட்டுள்ளது.

தலித் மக்களின் வாக்குகள்

பெரும்பான்மை சமூகமான லிங்காயத்துகளுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த சமூக மக்களின் வாக்குகள் பா.ஜனதாவுக்கு கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தலித் மக்களின் வாக்குகளையும் கவர்ந்துவிட்டால், வெற்றி பெறுவதில் சிரமம் இருக்காது என்று கருதப்படுகிறது.

அதன் காரணமாகவே தலித் ஒருவருக்கு கட்சியின் தலைவர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரவிந்த் லிம்பாவளி கடந்த 2008-13-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் மந்திரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கட்சி மேலிடத்தில் செல்வாக்குடன் திகழ்கிறார்.

Next Story