பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட என்.மகேஷ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் சேர்ந்தார்
பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட என்.மகேஷ் எம்.எல்.ஏ., நளின்குமார் கட்டீல் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
பெங்களூரு: பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட என்.மகேஷ் எம்.எல்.ஏ., நளின்குமார் கட்டீல் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
வாக்கெடுப்பை புறக்கணித்தார்
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் என்.மகேஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு குமாரசாமி தலைமையில் அமைந்த காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் அவர் மந்திரியாக பணியாற்றினார். கட்சி மேலிடத்தின் உத்தரவை அடுத்து சில மாதங்களில் அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு குமாரசாமி அரசுக்கு நெருக்கடி வந்தபோது, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. அதில் பகுஜன் சமாஜ் கட்சி, குமாரசாமி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு என்.மகேஷ் எம்.எல்.ஏ.வுக்கு உத்தரவிட்டது. ஆனால் அவர் அந்த வாக்கெடுப்பை புறக்கணித்தார். இதையடுத்து அவரை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து அக்கட்சி தலைவி மாயாவதி நீக்கினார். அதன் பிறகு அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டார். விரைவில் பா.ஜனதாவில் சேரப்போவதாக அவர் அறிவித்து இருந்தார்.
கர்நாடகம் வளர்ச்சி
இந்த நிலையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் என்.மகேஷ் பா.ஜனதாவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் ஆகியோரது முன்னிலையில் அவர் பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு கட்சி கொடியை வழங்கி தலைவர்கள் வரவேற்று கட்சியில் சேர்த்துக் கொண்டனர். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
என்.மகேஷ் எம்.எல்.ஏ. போராடி மேலே வந்தவர். அவருக்கு கட்சியை கட்டமைக்கும் பலம் உள்ளது. அவர் தலித் மக்களின் இதயங்களை வென்றவர். மற்ற சமூக மக்களின் நலனில் அவருக்கு அக்கறை உள்ளது. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, என்.மகேஷ் தாமாக முன்வந்து ஆதரவு வழங்கினார். எடியூரப்பா தலைமையில் கர்நாடகம் வளர்ச்சி அடையும் என்று கருதி அவர் பா.ஜனதாவை ஆதரித்தார்.
பா.ஜனதாவுக்கு பெரிய பலம்
அவரை நாங்கள் வரவேற்று கட்சியில் இணைத்துக் கொள்கிறோம். அவரது உழைப்பை பா.ஜனதா பயன்படுத்திக் கொள்ளும். வரும் நாட்களில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்.மகேஷ் இணைந்ததின் மூலம் பா.ஜனதாவுக்கு பெரிய பலம் கிடைத்துள்ளது. பா.ஜனதா கொள்கைகளை முன்வைத்து நாங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இதில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், ஆர்.அசோக், எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story