கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு


கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 9:58 AM IST (Updated: 6 Aug 2021 9:58 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பொன்னேரி, 

சென்னை புழல் இரட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது 38). இவரது குடும்பத்தினரும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ருத்ரகுமார் (32) குடும்பத்தினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2016 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் முனுசாமியை கீழே தள்ளி கல்லை தலையில் போட்டுவிட்டு ருத்ரகுமார் தப்பிச் சென்றார்.

படுகாயத்துடன் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முனுசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார். புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்ரகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக புழல் போலீசார் தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி 4-வது அமர்வு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் திருமலை ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி விஜயராணி தீர்ப்பு வழங்கினார். ருத்ரகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறைத்தண்டனையும விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story