பொன்னேரி பேரூராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
பொன்னேரி பேரூராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கிறது.
இந்த நிலையில் பொன்னேரி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முதல்கட்ட பணி தொடங்க ரூ.54 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி மூலம் 51 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கவும், 1,870 மனித நுழைவு தொட்டிகள் 8,693 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் 60 லட்சம் லிட்டர் திறன் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் வெளியேற நிலையம் அமைக்க உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வரும் நிலையில் பெரியகாவனம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கி பள்ளம் தோண்டப்பட்டது.
இதற்கு பெரியகாவனம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி நேற்று பொன்னேரி தேரடி தெருவில் இணைந்து வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகம் நோக்கி 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வந்தவுடன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தற்காலிகமாக பணி நடக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டத்தை கைவிடும்படி கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story