பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் 12-ந்தேதி விண்ணில் பாய்கிறது


பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் 12-ந்தேதி விண்ணில் பாய்கிறது
x
தினத்தந்தி 6 Aug 2021 10:58 AM GMT (Updated: 6 Aug 2021 10:58 AM GMT)

பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் வருகிற 12-ந்தேதி விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சென்னை,

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (இஸ்ரோ) ஏற்பட்டது. குறிப்பாக நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ‘பி.எஸ்.எல்.வி. சி-51’ ராக்கெட் மட்டும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதில் பொருத்தப்பட்டிருந்த பிரேசில் நாட்டை சேர்ந்த ‘அமோசோனியா’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் அதனுடன் 18 செயற்கைகோள்கள் விண்ணில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது நடப்பு ஆண்டுக்கான 2-வது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ தயாராகி வருகிறது.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ‘ஈ.ஓ.எஸ்.-03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த செயற்கைகோள் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தப்பட்டு வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 5.43 மணிக்கு வானிலை நிலைகளுக்கு உட்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது விண்ணில் செலுத்தப்படுவது ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 14-வது ராக்கெட்டாகும்.

பூமி கண்காணிப்பு செயற்கைகோள்

விண்ணில் செலுத்தப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைகோள் அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைகோளாகும். இது பூமியின் மேல்பரப்பில் இருந்து 36 ஆயிரம் கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.

இந்த ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் முதல்முறையாக செயற்கைகோளை வெப்பத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத்தகடு பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட் டவுன்’ அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Next Story