ஸ்டெர்லைட் ஆலை வழக்கு; தூத்துக்குடியில் 1,500 போலீசார் குவிப்பு
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க கோரிய வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படுவதாக இருந்ததால், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கொரோனா வைரஸ்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவியது. இதனால் ஏரளமானவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க ஸ்டெர்லைட் நிறுவனம் அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் 3 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு ஏப்ரல் 29-ந் தேதி அரசாணை வெளியிட்டது.
ஆக்சிஜன் உற்பத்தி
மேலும், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவையும் தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் கண்காணிப்பில் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் தொடங்கின. இதுவரை 2,132 டன் திரவ ஆக்சிஜனும், 11.19 டன் வாயு நிலையிலான ஆக்சிஜனும் 32 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் ஆலைக்கு உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி கடந்த 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில், ஆலை மேலும் 6 மாதம் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு, தற்போது ஆக்சிஜன் தேவை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கை 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
போலீஸ் குவிப்பு
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கருதப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் நேற்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தென்மண்டலம் முழுவதும் இருந்து போலீசார் தூத்துக்குடிக்கு வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், காய்கறி மார்க்கெட் அருகே, ராஜாஜி பூங்கா மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனம், அதனை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலவர தடுப்பு போலீசார், வஜ்ரா வாகனம், தண்ணீரை பீய்ச்சி அடிக்கக்கூடிய வாகனம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் வாகனங்கள், தளவாடங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் நேற்று ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிப்பதற்கான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரவில்லை.. இதனால் மதியத்துக்கு பிறகு போலீசார் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story