மாமல்லபுரம் அருகே கார் கவிழ்ந்து எரிந்து சேதம் ஆஸ்பத்திரி ஊழியர் காயம்


மாமல்லபுரம் அருகே கார் கவிழ்ந்து எரிந்து சேதம் ஆஸ்பத்திரி ஊழியர் காயம்
x
தினத்தந்தி 6 Aug 2021 4:16 PM GMT (Updated: 2021-08-06T21:46:41+05:30)

மாமல்லபுரம் அருகே கார் திடீரென நிலைதடுமாறி ஒரு வீட்டு வளாகத்தில் புகுந்து கவிழ்ந்து எரிந்து நாசமானது. காரை ஓட்டி வந்த தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் காயத்துடன் உயிர் தப்பினார்.

மாமல்லபுரம்,

சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருபவர் நாராயணன் (வயது 57), இவர் ஒரு வேலை விஷயமாக பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை தானே ஓட்டிச்சென்றார்.

காரில் இவருடன் வேறு யாரும் பயணம் செய்யவில்லை. கார் மாமல்லபுரம் அருகே கூத்தவாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி வலது பக்கத்தில் உள்ள ரிச்சர்டு என்பரின் வீட்டு வளாகத்திற்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

முற்றிலும் எரிந்து நாசமானது

அப்போது பெட்ரோல் கசிவு ஏற்பட்டு அந்த கார் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. அதற்குள் அந்த வீட்டில் உள்ளவர்கள் காருக்குள் சிக்கி தவித்த நாராயணனை காப்பாற்றினர். பின்னர் அந்த வீட்டு உரிமையாளர்கள் மாமல்லபுரம் போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். மாமல்லபுரம் தீயணைப்பு துறை அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு ஊழியர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

ஆனால் கார் அதற்குள் முற்றிலும் எரிந்து நாசமானது. தலையில் சிறிய காயத்துடன் உயிர்தப்பி காயம் அடைந்த நாரயணனை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.

இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story