மூதாட்டி கொலையில் தொழிலாளி கைது; பரபரப்பு வாக்குமூலம்


மூதாட்டி கொலையில் தொழிலாளி கைது; பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 6 Aug 2021 10:07 PM IST (Updated: 6 Aug 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே மூதாட்டி கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஏரல்:
ஏரல் அருகே மூதாட்டி கொலையில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். போலீசில் அவர் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில், மூதாட்டியிடம் நகையை பறித்தபோது என்னை அடையாளம் கண்டு கொண்டதால் வெட்டிக்கொன்றேன், என கூறியுள்ளார்.

மூதாட்டி கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் மேலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருடைய மனைவி முத்துக்கிளி (வயது 70). கடந்த 3-ந் தேதி அதிகாலை வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்க வந்த போது இவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மர்ம நபரால் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ஜேம்ஸ் வில்லியம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.

தொழிலாளி கைது

இந்த நிலையில் நேற்று வாழவல்லான் மேலூர் பஸ்நிறுத்தம் அருகில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் வாழவல்லான் மேலூர் மெயின் ரோட்டை சேர்ந்த முருகையா மகன் ஆறுமுகராஜ் (46), கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் முத்துக்கிளியை கொன்று நகைகளை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் ஆறுமுகராஜை கைது செய்தனர்.

வாக்குமூலம்

அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
நாங்குநேரி பட்டர்புரத்தில் குடும்பத்துடன் இருந்தபோது எனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த செல்லையா என்பவருக்கும், எனக்கும் இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. செல்லையா எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் அவரையும், அவர் மனைவி பேச்சித்தாயையும் 2018-ம் ஆண்டு வெட்டி கொலை செய்தேன். இந்த கொலை வழக்கு நெல்லை மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதன் பின்னர் எனது மனைவி, குழந்தைகளுடன் என் தாயின் சொந்த ஊரான வாழவல்லான் மேலூர் ஊருக்கு வந்துவிட்டேன். இங்கே இருந்து தினமும் கூலி வேலைக்கு சென்று வந்தேன். கொரோனா பாதிப்பால் கடந்த 1½ ஆண்டாக வேலை இல்லாமல் சிரமப்பட்டேன். இதனால் யாரிடம் நகை, பணம் திருடலாம் என யோசித்து வந்தேன்.
நான் முன்பு வேலைக்கு செல்லும்போது நான் வசிக்கும் அதே ரோட்டில் வசித்து வந்த முத்துக்கிளியை தினமும் பார்ப்பேன். அவரிடம் பேச்சு கொடுத்து நல்ல முறையில் பழகினேன். அவரது கணவர் வயதாகி இருப்பதையும், மகன்கள், மகள்கள் திருமணமாகி வெளியூரில் இருப்பதையும் தெரிந்து கொண்டேன். முத்துக்கிளி கழுத்து, கையில் நிறைய நகைகள் அணிந்து இருப்பார்.

வெட்டிக்கொன்றேன்

இதை பார்த்ததும் அந்த நகைகளை கொள்ளையடித்தால் செலவுக்கு பல மாதங்கள் உதவும் என திட்டம் போட்டேன். கடந்த 3-ந் தேதி அதிகாலை அவரது வீட்டு பின்புறம் உள்ள வாழைத்தோட்டம் வழியாக காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நின்றுகொண்டேன்.
முத்துக்கிளி வீட்டின் பின் கதவை திறந்து தண்ணீர் எடுத்து வந்தபோது அவரது தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்தேன். அப்போது அவர் நகையை பிடித்துக்கொண்டு ஆறுமுகராஜ் நீயா, என்ன காரியம் செய்கிறாய்? என கூச்சலிட்டார். அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டதால் என்னை போலீசில் காட்டிக்கொடுத்து விடுவார் என நினைத்து, நான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினேன்.

சென்னை செல்ல திட்டம்

பின்னர் அவரது தாலி சங்கிலி, வளையல், கம்மல்களை கழற்றி இடுப்பில் வேட்டி மடிப்பில் கட்டிக்கொண்டு வாழைத்தோட்டம் வழியாக மெயின் ரோட்டை அடைந்து விட்டேன். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வேட்டியில் வைத்திருந்த நகைகளில் கம்மல் மட்டும் தான் இருந்தது. தாலி சங்கிலி, வளையல் ஆகியன நான் ஓடி வரும்போது வாழைத்தோட்டத்தில் எங்கேயோ விழுந்து விட்டது.
பின்னர் 2 கம்மல்களையும், ரத்தக்கறை பட்ட வேட்டி மற்றும் அரிவாள் ஆகியவற்றை ஒரு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு தூத்துக்குடியில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டேன். போலீஸ் என்னை தேடுவதை அறிந்து நான் மீண்டும் வீட்டுக்கு வந்து மனைவியிடம் பணம் வாங்கிவிட்டு சென்னை சென்று விடலாம் என நினைத்து பஸ் நிறுத்தத்தில் நின்றபோது போலீசார் என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
முத்துக்கிளியை வெட்டிய அரிவாள் மற்றும் 1 பவுன் கம்மலையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் ஆறுமுகராஜை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

Next Story