9 கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு


9 கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 6 Aug 2021 10:09 PM IST (Updated: 6 Aug 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க 9 கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக இன்கோசர்வ் முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்து இருக்கிறார்.

ஊட்டி,

விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க 9 கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக இன்கோசர்வ் முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்து இருக்கிறார்.

பச்சை தேயிலை வினியோகம்

நீலகிரி மாவட்டத்தில் தொழில்துறை கட்டுப்பாட்டில் உள்ள இன்கோசர்வ் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து, அதற்கான விலையை பெற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பால், தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி அதிகரித்தது. இருப்பினும் போதிய அளவு தேயிலைத்தூள் விற்பனை ஆகாததால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படாமல் உள்ளது.

விற்பனை இல்லை

இந்த நிலுவைத்தொகையை வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அப்போதுதான் தேயிலை தோட்டங்களை பராமரிப்பது போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில் 9 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இன்கோசர்வ் முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை. விற்பனை சரிந்ததாலும், விலை குறைந்ததாலும் சில கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் பச்சை தேயிலை வினியோகித்த விவசாயிகளுக்கு கடந்த மே, ஜூன் மாதங்களில் தொகை வழங்கவில்லை.

நிலுவை தொகை

இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொண்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நிலுவை தொகையை வழங்க முடிவு செய்து உள்ளது. சிறு தேயிலை விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்கோசர்வ் சொந்த நிதியில் இருந்து ரூ.6 கோடி நிலுவைத் தொகை வழங்க விடுவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மேற்குநாடு, கரும்பாலம், மகாலிங்கா, இத்தலார், பந்தலூர், கிண்ணக்கொரை, எப்பநாடு, பிதர்காடு உள்பட 9 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் நிலுவைத்தொகை பெற்று பயன் அடைவார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story