பாதிரிமூலாவில் தார்சாலை அமைக்கப்படுமா?


பாதிரிமூலாவில் தார்சாலை அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 6 Aug 2021 4:43 PM GMT (Updated: 6 Aug 2021 4:45 PM GMT)

அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலாவில் தார்சாலை அமைக்கப்படுமா என்று ஆதிவாசி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பந்தலூர்,

அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலாவில் தார்சாலை அமைக்கப்படுமா? என்று ஆதிவாசி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆதிவாசி காலனி

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த காலனியானது பள்ளத்தாக்கான பகுதியில் அமைந்து உள்ளது. மேலும் அந்த காலனிக்கு செல்லும் சாலை மண் சாலையாக காணப்படுகிறது.

மழைக்காலங்களில் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இது தவிர குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தார்சாலை இல்லை

சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை விரைவாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

இதுகுறித்து அந்த காலனி ஆதிவாசி மக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் தார்சாலை கிடையாது. மண்சாலை மட்டுமே உள்ளது. அதுவும் மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடுகிறது. கர்ப்பிணிகள், நோயாளிகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு வாகனங்களில் அழைத்து செல்ல தார்சாலை உள்ள மூலக்கடை வரை தொட்டில் கட்டி சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

வலுக்கி விழுந்து...

அப்போது குண்டும், குழியுமான அந்த சாலையில் விரைவாக செல்ல முடிவது இல்லை. மேலும் வலுக்கி விழுந்து காயம் அடையும் நிலை காணப்படுகிறது. காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் துரத்தினால் கூட விரைவாக ஓடி சென்று ஒளிந்து கொள்ள முடிவது இல்லை. 

இதனால் எங்கள் பகுதியில் தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பலமுறை கேட்டுக்கொண்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது உடனடி நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story