பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது


பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 6 Aug 2021 10:20 PM IST (Updated: 6 Aug 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது. அப்போது குன்னூரில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது. அப்போது குன்னூரில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிளஸ்-2 துணைத்தேர்வு

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தொடர்ந்து துணை தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியானது. நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத 121 பேர் விண்ணப்பித்தனர். இதையொட்டி வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. தேர்வுக்காக குன்னூர் கல்வி மாவட்டம், கூடலூர் கல்வி மாவட்டத்தில் தலா ஒன்று என 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று நீலகிரியில் பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. குன்னூரில் உள்ள புனித மரியன்னை மகளிர் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத வந்தவர்களின் ஹால் டிக்கெட் சரிபார்க்கப்பட்டது. மேலும் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

ஆய்வு

தொடர்ந்து உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இது தவிர கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் இருக்கைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட்டு இருந்தனர்.  

குன்னூர் தேர்வு மையத்தில் நடந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், தேர்வு எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் உடனிருந்தார். 

19-ந் தேதி வரை...

குன்னூர் கல்வி மாவட்டத்தில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த 52 பேரில் 41 பேர் தேர்வு எழுதினர். கூடலூர் கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்த 69 பேரில் 64 பேர் தேர்வு எழுதினர். 

நீலகிரியில் மொத்தம் 121 பேரில் 105 பேர் தேர்வு எழுதினர். 16 பேர் தேர்வு எழுத வரவில்லை. மலையாள பாடத்தில் 6 பேர், அரபி பாடத்தில் ஒருவர், மற்றவர்கள் தமிழ் பாடத்தில் எழுதினர். வருகிற 19-ந் தேதி வரை பிளஸ்-2 துணைத்தேர்வு நடைபெறுகிறது.


Next Story