கர்நாடக எல்லையில் லாரிகளை நிறுத்தி தமிழக, கேரள டிரைவர்கள் போராட்டம்


கர்நாடக எல்லையில் லாரிகளை நிறுத்தி தமிழக, கேரள டிரைவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2021 10:22 PM IST (Updated: 6 Aug 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கேட்டதால் கர்நாடக எல்லையில் லாரிகளை நிறுத்தி தமிழக, கேரள டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூர்,

கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கேட்டதால் கர்நாடக எல்லையில் லாரிகளை நிறுத்தி தமிழக, கேரள டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் 

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இதில் கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வர கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி நீலகிரி-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து செல்பவர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்று கர்நாடக சுகாதாரத்துறையினரும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். 

வாக்குவாதம்

இதனால் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கும் செல்லும் காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகன டிரைவர்களிடம் கர்நாடக மாநில சுகாதாரத்துறையினர் கொரோனா இல்லை என்ற சான்றிதழை கேட்டு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

அந்த சான்றிதழ் இல்லையென்றால் எல்லையில் தடுத்து நிறுத்துவதாக தெரிகிறது. இதனால் நேற்று நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்து சென்ற சரக்கு வாகன டிரைவர்களுக்கும், கர்நாடக சுகாதாரத்துறையினருக்கும் இடையே கக்கநல்லாவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டம்

மேலும் கர்நாடக எல்லையில் சரக்கு வாகனங்கள் வரிசையாக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் கேரள மற்றும் தமிழக டிரைவர்கள் வெகுநேரம் காத்து கிடந்தனர். ஆனால் கர்நாடகாவில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்கள் வழக்கமான நடைமுறை என்பதால் சிரமமின்றி வந்தன.

இதற்கிடையில் காத்து கிடந்த டிரைவர்கள் மதியம் 1 மணியளவில் திடீரென  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் 2 மணியளவில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இல்லாத டிரைவர்களை கர்நாடகாவுக்குள் அந்த மாநில சுகாதாரத்துறையினர் அனுமதிக்க தொடங்கினர். 

இதையடுத்து போராட்டத்ததை டிரைவர்கள் கைவிட்டனர். எனினும் இன்று(சனிக்கிழமை) முதல் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளிமாநில டிரைவர்கள் அனுமதிக்கப்படுவார்கள், இல்லையென்றால் வாகனஙகள் திருப்பி அனுப்பப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறையினர் அறிவித்து உள்ளனர்.


Next Story