தென்னிந்திய புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு பயிற்சி


தென்னிந்திய புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 6 Aug 2021 10:23 PM IST (Updated: 6 Aug 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் தென்னிந்திய புலிகள் காப்பக அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது.

கூடலூர்,

முதுமலையில் தென்னிந்திய புலிகள் காப்பக அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் தொடங்கியது.

அதிகாரிகளுக்கு பயிற்சி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு வனத்துறை அரங்கில் தென்னிந்திய புலிகள் காப்பக அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் தலைமை தாங்கினார். தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரி ராஜேந்திர கார்வா முன்னிலை வகித்தார். தென்மண்டல அதிகாரி முரளி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். 

அப்போது அவர் கூறும்போது, தென்னிந்தியாவில் உள்ள காப்பக வனப்பகுதியில் புலிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் புலிகளின் எண்ணிக்கையை மேம்படுத்த வேண்டும். புலிகள் கணக்கெடுப்பின்போது ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும். 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கணக்கெடுப்பு நடைபெற்று வந்த நிலையில் இனிவரும் காலங்களில் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.

புலிகள் மதிப்பீடு

தொடர்ந்து கர்நாடக மாநில கூடுதல் தலைமை முதன்மை வன பாதுகாவலர் ஜெகத்ராமன், பெரியார் புலிகள் காப்பக கள இயக்குனர் அனூப் உள்பட 15 புலிகள் காப்பக கள இயக்குனர்கள் புலிகள் மதிப்பீட்டுக்கான பயிற்சி குறித்து விளக்கி பேசினர்.

கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த புலிகள் காப்பக துணை இயக்குனர்கள், வனச்சரகர்கள், பல்லுயிர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 89 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி முகாம் நாளை (8-ந் தேதி) வரை நடக்கிறது.


Next Story