அண்ணனை கொலை செய்ய கொடுத்த மின் இணைப்பில் பால்காரர் சிக்கினார்.கட்டிட மேஸ்திரி கைது
காட்பாடியில் அண்ணனை கொலை செய்ய கதவில் கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் பால்காரர் சிக்கினார். இது தொடர்பாக கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி
அண்ணனை கொல்ல மின் இணைப்பு
வேலூரை அடுத்த காட்பாடி பள்ளிகுப்பம் ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் குப்பன். இவருடைய மகன்கள் பாலு (வயது 48), சண்முகம் (41). இருவரும் கட்டிட மேஸ்திரிகள். அண்ணன்-தம்பி இருவரும் அருகருகே தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாலுவை கொலை செய்ய சண்முகம் திட்டமிட்டார்.
அதன்படி கடந்த 1-ந் தேதி அதிகாலையில் பாலு வீட்டின் முன்பு உள்ள இரும்பு கதவில் வயர் மூலம் மின்சார இணைப்பை சண்முகம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிகாலையில் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் சப்ளை செய்யும் தாராபடவேடு பகுதியை சேர்ந்த பால்காரர் கோவிந்தசாமி பால் கொடுக்க பாலுவின் வீட்டிற்கு வந்தார்.
பால்காரர் சிக்கினார்
கதவைத் திறந்தபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கதவில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக கோவிந்தசாமியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் பாலுவின் குடும்பத்தினர் வெளியே வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இது தொடர்பாக பாலு காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் சண்முகம் இரும்பு கதவில் மின் இணைப்புகொடுத்து, தனது அண்ணன் பாலுவை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதை எதிர்பாராத பால்காரர் மின் இணைப்பில் சிக்கியதால் பாலு உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story