போலீஸ் பணிக்கான உடற்திறன் தேர்வு நிறைவு பெற்றது
தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடற்திறன் தேர்வு நிறைவு பெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடந்து வந்த போலீஸ் பணிக்கான உடற்திறன் தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது.
போலீஸ் தேர்வு
2020-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), சிறைக்காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி (ஆண்) விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துதேர்வு ஏற்கனவே கடந்த 13.12.2020 அன்று நடந்தது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1,662 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1,231 ஆண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 2,893 ஆண் விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு தேர்வு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 26-ந் தேதி தொடங்கியது. ரெயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி நேரடி மேற்பார்வையில் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமையிலான அதிகாரிகள் தேர்வை நடத்தினர். முதலில் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. தொடர்ந்து உயரம், மார்பளவு ஆகியவை கணக்கீடு செய்யப்பட்டன. பின்னர் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது.
நிறைவடைந்தது
இந்த தேர்வில் பங்கேற்ற 2 ஆயிரத்து 237 பேரில், 1,517 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான உடல் திறன் தேர்வு கடந்த 3-ந் தேதி முதல் நடந்து வந்தது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தேர்வின் கடைசி நாளான நேற்று முன்னாள் படைவீரர்களுக்கான உடற்திறன் தேர்வு நடந்தது. இதில் 199 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்றுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்து வந்த தேர்வு முகாம் நிறைவு பெற்றது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த விண்ணப்பதாரரின் உறவினர் தேர்வு மையத்துக்கு வந்து எழுத்துப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தான் முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story