லாரியில் கடத்திய 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்திய 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 6 Aug 2021 5:17 PM GMT (Updated: 6 Aug 2021 5:17 PM GMT)

தேனியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 13 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

உத்தமபாளையம்: 

13 டன் ரேஷன் அரிசி கடத்தல்
உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் நேற்று தேனியில் இருந்து கேரள மாநிலத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் உமாதேவி, பழனிசாமி ஆகியோர் தலைமையில் தேனி குன்னூர் டோல்கேட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் 42 கிலோ எடையுள்ள 315 மூட்டைகளில் மொத்தம் 13 டன் ரேஷன் அரிசியை கேரள மாநிலத்துக்கு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே லாரி மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

3 பேர் கைது 
லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பினோஜ் (வயது 29), ஷாலு (28) என்றும், அவர்கள் தேனி, கொடுவிலார்பட்டி, நாகலாபுரம், ஸ்ரீரங்கபுரம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கியது தெரியவந்தது. 


மேலும் விசாரணையில், அரிசி கடத்தலுக்கு பள்ளபட்டியை சேர்ந்த ரேஷன் கடை தற்காலிக ஊழியர் அழகு (42) என்பவர் உதவியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பினோஜ், ஷாலு, அழகு ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

Next Story