கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 6 Aug 2021 11:02 PM IST (Updated: 6 Aug 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை, ஆக.7-
ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு வழிபாடு
ஆடி மாதத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆடி மாதத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் ஆடிகிருத்திகை, அடிப்பெருக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகம் வந்தனர். பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வளாகத்தில் உள்ள சூலாயுதம் முன்பு பெண்கள் அகல்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அம்மனுக்கு கூழ் படையல்
பக்தர்கள் பலர் அம்மனுக்கு கூழ் படைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இதேபோல திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், சாந்தாரம்மன் கோவில், மனோன்மணி அம்மன் கோவில், அரியநாச்சியம்மன் கோவில், புவனேஸ்வரி அம்மன் கோவில், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் விளக்கு பூஜைகளும் நடைபெற்றன. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
மணமேல்குடி-வடகாடு
வடகாடு முத்துமாரியம்மனுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதேபோல் மணமேல்குடி வடக்கூர் அம்மன்கோவில், உச்சயினி மாகாளியம்மன் கோவில், தெற்கூர் அம்மன்கோவில், காரக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
அறந்தாங்கி
அறந்தாங்கி பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அறந்தாங்கி அருகே எரிச்சி சிதம்பரவிடுதி காமாச்சிஅம்மன் கோவிலில் நேற்று  கேப்பை கூழ் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Next Story