பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பரிசோதனை


பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பரிசோதனை
x
தினத்தந்தி 6 Aug 2021 11:06 PM IST (Updated: 6 Aug 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

மக்களைத்தேடி மருத்துவத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பரிசோதனை செய்யும் நிகழ்ச்சியை கலெக்டர் சந்திரகலா தொடங்கி வைத்தார்.

பனைக்குளம், 
மக்களைத்தேடி மருத்துவத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பரிசோதனை செய்யும் நிகழ்ச்சியை கலெக்டர் சந்திரகலா தொடங்கி வைத்தார்.
மருத்துவ சிகிச்சை
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வழுதூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பாக முதல்-அமைச்சரின் சிறப்புத் திட்டமான "மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மாவட்ட அளவிலான செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் சந்திரகலா தொடங்கி வைத்தார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கருமாணிக்கம், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றி தரமான மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் "மக்களைத் தேடி மருத்துவம்” என்ற மகத்தான திட்டத்தினை தொடங்கி  வைத்துள்ளார்.  
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனைகளில் 50,273 பேர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இவர்கள் சிரமமின்றி மருத்துவ சிகிச்சைபெற்று பயனடைவதோடு, தொற்றா நோய்கள் மூலம் ஏற்படும் மரணவிகிதத்தை முற்றிலும் குறைக்கமுடியும். அதன்படி, மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் விதமாக மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா ஒரு மருத்துவக் குழு வீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 
மருத்துவக்குழு
முதற்கட்டமாக மண்டபம், திருப்புல்லாணி, பரமக்குடி, சாயல்குடி ஆகிய 4 வட்டாரங்களில் மருத்துவக் குழு அலுவலர்களுக்கான வாகனம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிலும், ஒரு இயன்முறை மருத்துவர், ஒருசெவிலியர், மகளிர் நல தன்னார்வளர்கள் இடம் பெறுவர். விரைவில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மருத்துவக் குழுக்கள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என மாவட்ட ஆட்சித் தலை பேசினார். 
விழாவில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற் கொடி, ராமநாதபுரம் தாசில்தார் ரவிச் சந்திரன், மருத்துவர் ரவிச்சந்திரன், மண்டபம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம், தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், வாலாந்தரவை ஊராட்சி தலைவர் முத்தமிழ்செல்வி பூரணவேல், தி.மு.க. மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வழுதூர் பி.டி.ராஜா, முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.சி.கனகராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் குண சேகரன், முன்னாள் சேர்மன் கலைமதி ராஜா, வழுதூர் தி.மு.க. செயலாளர் கார்மேகம், அவைத்தலைவர் பாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 வழுதூர் கிராம பொதுமக்கள் சார்பில் அனைவரையும் வரவேற்று பொன்னாடை அணிவித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.கே.சுரேந்திரன், மண்டபம் வட்டார சுகாதார துறை ஆய்வாளர் மகேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story