விருத்தாசலத்தில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு உடலை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்க மறுத்ததால் பரபரப்பு
விருத்தாசலத்தில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான். அவனது உடலை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்க குடும்பத்தினர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பூதாமூர் காந்தி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அஸ்வின் (வயது 14). தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அஸ்வின், அதே பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள நல்லேரி குளத்தில் நண்பர்களோடு குளித்து கொண்டிருந்தான்.
அப்போது, அஸ்வின் நீரில் மூழ்கி, தத்தளித்தான். உடன் சக நண்பர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அஸ்வினை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
இதையடுத்து, சிறுவனின் உடலை குடும்பத்தினர் வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் வருவாய்த்துறையினர் உயிரிழந்த மாணவன் அஸ்வினின் வீட்டுக்கு சென்றனர்.
அங்கிருந்தவர்களிடம் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து உடலை ஒப்படைக்க முன்வரவில்லை.
இதனால் போலீசார் மற்றும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவனின் உடலை அவர்கள் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story