அரசு அலுவலர்கள் சமூக பொறுப்புடன் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க அமைச்சர் வேண்டுகோள்
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் அரசு அலுவலர்கள் சமூக தொண்டுடன் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்று கூறினார்.
திருவண்ணாமலை
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் அரசு அலுவலர்கள் சமூக தொண்டுடன் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்று கூறினார்.
உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு தகுதியானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு உங்கள் தொகுதியில் முதல்- அமைச்சர் திட்டம், தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேர்தல் பிரிவு ஆகியவை மூலம் 1158 பேருக்கு ரூ.2 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 670 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.
முன்னதாக அவர் பேசுகையில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் இருந்து 17 ஆயிரத்து 981 மனுக்கள் பெறப்பட்டு பெட்டியில் போடப்பட்டது. இதற்கான பெட்டியை செய்தவன் நான் தான்.
மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு...
இந்த மனுக்களில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் 5 ஆயிரத்து 522 மனுக்களுக்கு பரிசீலனை செய்து உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அரசு அலுவலர்கள் சமூக தொண்டுடன் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் தான் மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வர முடியும். எனவே மீதமுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
செய்யாறு சிப்காட்டில் சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் வந்து உள்ளது. சிப்காட் கொண்டு வந்ததற்கான முக்கிய காரணம் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்காக தான். அங்குள்ள தொழிற்சாலைகளில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைத்து உள்ளது என்று ஆய்வு செய்ய உள்ளோம். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சி.எஸ்.ஆர். நிதி உள்ளது. இதனை பொது நலத்திற்கு பயன்படுத்த வேண்டும். இந்த நிதி மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தை பசுமையாக்க நெடுஞ்சாலைகளில் மரங்கள் நட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை அலுவலர் கந்தன், சமூக நலத்துறை தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story