கோவில்களின் வாசல் முன்பு நின்று பக்தர்கள் வழிபாடு


கோவில்களின் வாசல் முன்பு நின்று பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 7 Aug 2021 12:05 AM IST (Updated: 7 Aug 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக பொதுதரிசனத்துக்கு அரசு தடை விதித்து உள்ளதால் நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களின் வாசல் முன்பு நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். கொரோனா வைரஸ் ஒழிய வேண்டும் என்பதற்காக சிங்கம்புணரியில் திருவிளக்கு பூஜையை பெண்கள் நடத்தினர்.

காரைக்குடி,

கொரோனா பரவல் காரணமாக பொதுதரிசனத்துக்கு அரசு தடை விதித்து உள்ளதால் நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களின் வாசல் முன்பு நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். கொரோனா வைரஸ் ஒழிய வேண்டும் என்பதற்காக சிங்கம்புணரியில் திருவிளக்கு பூஜையை பெண்கள் நடத்தினர்.

தரிசனத்துக்கு தடை

 தமிழகத்தில் கொரோனா பரவல் 3-வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. ஆடி மாதம் கோவில்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 8-ந்தேதி முதல் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவில் முன்பு பக்தர்கள் வழிபாடு

இந்த நிலையில் நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன், சிவகங்கை மதுரை முக்கு ரோட்டில் உள்ள காளியம்மன் கோவில், காரைக்குடி சிவன் கோவிலில் அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் சிலர் கோவிலுக்கு வெளியே அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். கோவில் வாசல் முன்பு சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், போதிய சமூக இடைவெளியில் நிற்கும்படி கோவில் நிர்வாகத்தினர் அவ்வப்போது அறிவிப்பு செய்தனர்.
காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் முன்பு நின்று ஏராளமான பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். சமூக இடைவெளி இன்றி பெண்கள் திரண்டு நின்றதால் அங்கு வந்த பெண் போலீஸ்காரர் ஒருவர், பெண் பக்தர்களிடம் சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

திருவிளக்கு பூஜை

சிங்கம்புணரி காரைக்குடி சாலையில் அமைந்துள்ள உப்பு செட்டியார் தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும் கொேரானா வைரஸ் தொற்று ஒழிய வேண்டியும் நேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் கோவில் முன்பு உள்ள மைதானத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் 108 திருவிளக்கு பூஜை நடத்தினர்.
சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் சித்தர் மலர் மாலைகளுடன் அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து நாடார் பேட்டையில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில், வேட்டையின் பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

Next Story