ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 7 Aug 2021 1:50 AM IST (Updated: 7 Aug 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

ஆடிமாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சமயபுரம், 
ஆடிமாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

3-வது வெள்ளிக்கிழமை

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி காலையில் இருந்தே கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்தனர். 

அவர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் முடிகாணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து சென்றும், அக்னிச்சட்டி ஏந்தி, அலகு குத்தியும் வந்து கோவில் முன்புறம் தீபமேற்றி வழிபட்டனர். தொடர்ந்து, அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

துறையூர்

இதேபோன்று, இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில், மாகாளிகுடியிலுள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், வனத்தாயி அம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

துறையூரில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் கூழ் வழங்கப்பட்டது. இதுபோல் ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருச்சி அய்யப்பநகர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், திருச்சி வளையல்காரத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்திலும்,  பெரியகம்மாளத்தெருவில உள்ள காளிகாபரமேஸ்வரி கோவிலில் அம்மன் நவதானிய அலங்காரத்திலும், துவரங்குறிச்சி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் காய்கறி அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

முசிறி, தா.பேட்டை

மேலும் முசிறியில் உள்ள மகாமாரியம்மன், அழகுநாச்சிஅம்மன், கருமாரியம்மன், காளியம்மன், பாலத்துமாரியம்மன், சின்ன சமயபுரத்தாள், அங்காள பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விளக்கு ஏற்றிவழிபட்டனர். இதேபோன்று தா.பேட்டை பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன், செல்லாண்டி அம்மன், மகாமாரியம்மன், ராஜகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

தொட்டியம் ஸ்ரீமதுரைகாளியம்மன் கோவிலில் உற்சவஅம்மனுக்கு ஸ்ரீசந்தானலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பாலசமுத்திரம் பகவதி அம்மன் கோவிலில் பகவதி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது.

Next Story